நியாயவிலைக் கடைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

சென்னை: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தலைமையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு மேலாளர்கள், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர்கள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் துவக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மண்டலங்களின் பயன்பாட்டிற்காக ரூ.61.93 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 7 ஈப்புகளை மண்டல மேலாளர்களிடம் வழங்கினார். பின்பு கூட்ட அரங்கில் கண்காட்சியைப் பார்வையிட்டார். அமைக்கப்பட்டிருந்த சிறுதானியக் வெள்ள நிவாரணம் வழங்கல் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் ஆகிய பணிகளைக் குறுகிய காலத்தில் சிறப்பாகச் செய்த அனைத்து அலுவலர்களுக்கும் குறிப்பாகப் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கும் அமைச்சர் அவர்கள் பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்தார்.

நியாயவிலைக் கடைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு ‘பயோமெட்ரிக்’ கைரேகைப் பதிவு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பின், அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்குப் பொருள்களை வழங்கிட வேண்டும் என்றும் அதற்காகப் பொதுமக்களை எவ்விதத்திலும் சிரமப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஆண்டு தோறும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் சிறந்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்குப் பரிசு தொடர்ந்து வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கிணங்க 2023 ஆம் ஆண்டுக்கான பரிசுகள் பெற வேண்டியவர்களின் பட்டியலை விரைந்து தயாரித்து வழங்கிடவும் இதை ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில் வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாலின், கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை உரிய காலத்தில் நகர்வு செய்து பொதுமக்கள் எப்போது வந்து கேட்டாலும் இன்முகத்துடன் விநியோகம் செய்வதை உறுதி செய்திட வேண்டும் என்றும், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்களுடன் இணைந்து அரிசிக் கடத்தலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நடத்தப்படும் கூட்டங்களில் உரிய அலுவலர்கள் கலந்து கொண்டு தெரிவிக்கப்படும் குறைகளுக்கு உடனடித் தீர்வு கண்டிட வேண்டும் என்றும், தேவைப்படும் இடங்களில் பகுதிநேரக் கடைகள் திறந்திடவும் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளைப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரித்திடவும் தொடர்ந்து விரைந்து வாடகைக் கட்டடங்களுக்குப் பதிலாக சொந்தக் கட்டடங்கள் அனைத்துக் கடைகளுக்கும் அமைந்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், பகுதிநேரக் கடைகள் தேவைப்படும் ஊர்களில் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைக்காமலே அலுவலர்களே கண்டறிந்து உரிய முன்மொழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நுகர்வோர் பாதுகாப்புப் பணிகளான விலைக் கட்டுப்பாடு, பதுக்கல் தடுப்பு, நுகர்வோர் விழிப்புப் பணிகள் போன்றவற்றிலும் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினர் கவனம் செலுத்திச் செயல்பட வேண்டும் என்றும், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் கைப்பற்றிய வாகனங்களை விரைந்து ஏலம் விட வேண்டும் என்றும், தடுப்புக் காவலில் கைது செய்வதோடு நில்லாமல் வழக்குகளை விரைந்து முடித்து தண்டனை பெற்றுத் தருமளவுக்குச் செயல்பட வேண்டும் என்றும் மாநில எல்லையோர மாவட்டங்களில் ரோந்துப் பணியை அதிகரித்து கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று கூறி வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 253 நவீன நெல் சேமிப்புத் தளங்களை நம் துறைக்கு வழங்கி, நெல் கொள்முதலில் எவ்விதக் குறைபாடும் ஏற்படக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் என்றும் அந்த அறிவுறுத்தலின்படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார்.

விவசாயிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடமிருந்து கொண்டுவரப்படும் நெல்லினை உடனுக்குடன் கொள்முதல் செய்து அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமெனவும் கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள் உள்ளிட்ட பொருள்களுடன் மழையில் நனையாமல் பாதுகாக்கத் தேவையான தார்பாலின் ஆகியவற்றைப் பற்றாக்குறையின்றி வைத்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கினார். நெல் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கு அந்த மண்டல முதுநிலை மேலாளர்களும் மண்டல மேலாளர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் அனைத்து அலுவலர்களும் சிறப்பாகச் செயல்பட்டு முதலமைச்சர் அவர்களும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களும் அறிவித்துள்ள திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றி பொதுமக்கள் ஏதும் கோரிக்கை வைப்பதற்கு முன்பே அவர்களின் தேவையை அறிந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். கே. கோபால், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் ஹர் சஹாய் மீனா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சு. பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆ. அண்ணாதுரை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார். மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை துணை ஆணையாளர்கள், மாவட்ட வழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவுத் துறை பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post நியாயவிலைக் கடைக்கு வருகை தரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: