தண்டலம் ஊராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் தார் சாலை

 

திருப்போரூர், பிப்.2:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய தண்டலம் ஊராட்சியானது திருப்போரூர் பேரூராட்சியை ஒட்டி அமைந்துள்ளது. ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், சார்நிலை கருவூலம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இந்த ஊராட்சியின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. மேட்டுத் தண்டலம் மற்றும் தண்டலம் கிராமங்களை இணைக்கும் பிரதான சாலை சுமார் 3 கிமீ தூரம் கொண்டதாகும். இந்த சாலை சில இடங்களில் மண் சாலையாகவும், சில இடங்களில் தார் சாலையாகவும் காணப்பட்டது.

பல இடங்களில் சாலை பெயர்ந்து வெறும் ஜல்லிக்கற்களோடு காட்சி அளித்தது. இதையடுத்து, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் தலைமையில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தண்டலம் ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா தட்சிணாமூர்த்தி இந்த சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று பேசி தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து, முதலமைச்சர் கிராமச்சாலைகள் திட்ட நிதியிலிருந்து ரூ.2 கோடியே 2 லட்சம் மதிப்பில் பழைய சாலையை அகலப்படுத்தி புதியதாக அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 5.5 மீட்டர் அகலத்திற்கு கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது பணி நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 15 ஆண்டு காலமாக தீர்க்கப்படாத சாலை பிரச்னைக்கு தீர்வு கண்டு, புதிய சாலை அமைத்து தந்த ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், ஒன்றியக்குழு உறுப்பினர் சித்ரா தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

The post தண்டலம் ஊராட்சியில் ரூ.2 கோடி மதிப்பில் தார் சாலை appeared first on Dinakaran.

Related Stories: