சிஏஏ ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலி எடப்பாடியை கேளுங்கள்: ஓன்றுமே தெரியாதது போல் பேசும் ஓபிஎஸ்

திருமயம்: சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலியான எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் கேட்க வேண்டும். என்று ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நேற்று நடைபெற்ற ஓபிஎஸ் அணி நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முழுமையான பட்ஜெட்டை உறுதியாக நல்ல முறையில் நாடு சுபிட்சமாக இருப்பதற்கு தாக்கல் செய்யும். சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலியான எடப்பாடி பழனிச்சாமி இடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற பாஜவும், நாங்களும் ஒரே கூட்டணியில் தான் இருக்கின்றோம். அந்த கூட்டணி முறிவில்லை. பாஜவுடன் தொகுதி பங்கீடு முடிந்தவுடன் முதலில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிக்கு தான் தெரியப்படுத்தப்படும்.

ஏற்கனவே நாங்கள் சொல்லியபடி, நானும் டிடிவி தினகரனும் இணைந்து தான் பணியாற்றிக் கொண்டுள்ளோம். சசிகலா இணைந்து பணி செய்வாரா என்பதை அவரிடன் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சிஏஏ சட்டம் நிறைவேற முக்கிய காரணமே அதிமுகதான். 2019ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடியும், துணை முதல்வராக ஓபிஎஸ்சும் இருக்கும்போதுதான் மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் அளித்த ஆதரவால்தான் சிஏஏ சட்டம் நிறைவேறியது. இதேபோல் மக்களவையில் இருந்த எம்பியாக இருக்கும் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவு அளித்திருந்தார். ஆனால், தற்போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் பாதிப்பை அதிமுக அனுமதிக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். இதேபோல், ஓபிஎஸ்சும் எடப்பாடியை போய் கேளுங்கள் என்று எஸ்கேப்பாகிறார்.

 

The post சிஏஏ ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாட்டை அதிபுத்திசாலி எடப்பாடியை கேளுங்கள்: ஓன்றுமே தெரியாதது போல் பேசும் ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Related Stories: