ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு நேரடி தொடர்பு இருக்கு!: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு நேரடியாக தொடர்பு இருப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுகேஷ் சந்திரசேகர் தான் மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் பாலிவுட் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்தார். இவரிடம் அதிக அளவில் பணமும் பரிசுப்பொருள்களும் பெற்றதில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் முதலிடத்தில் இருக்கிறார். இது தொடர்பான வழக்கில் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப்பிரிவு பல முறை விசாரணை நடத்தியது. அதோடு ஜாக்குலினை இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு குற்றவாளியாக சேர்த்தது.

இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜாக்குலின் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும் சுகேஷ் சந்திரசேகர் தன்னை இவ்வழக்கில் சிக்கவைத்துவிட்டதாக கூறினார். அதோடு தான் ஒரு அப்பாவி என்றும், இவ்விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. அதில், `சுகேஷ் சந்திரசேகருடன் செய்து கொண்ட பணப்பரிவர்த்தனை தொடர்பாக இதுவரை உண்மைகளை தெரிவிக்காமல் ஜாக்குலின் மூடி மறைத்து வருகிறார். ஆதாரங்களுடன் விசாரித்தபோதுதான் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதோடு சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தவுடன் தனது செல்போனில் இருந்த தகவல்களை அழித்துவிட்டார். தனது நண்பர்களிடமும் அவர்களிடம் இருந்த ஆதாரங்களை அழித்துவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் சுகேஷ் செய்த அனைத்து குற்றங்களையும் தெரிந்து கொண்டு அதன் மூலம் கிடைத்த பலன்களை மகிழ்ச்சியுடன் அனுபவித்துள்ளார் என்பது சாட்சியங்களின் மூலம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை வரும் மார்ச் 15ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று நீதிபதி மனோஜ்குமார் அறிவித்தார்.

The post ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு நேரடி தொடர்பு இருக்கு!: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: