கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு பதக்க வேட்டையில் தமிழ்நாடு சாதனை: முதல் முறையாக 2வது இடம் பிடித்து அசத்தல்

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டித் தொடரின் பதக்க பட்டியலில், தமிழ்நாடு முதல் முறையாக 2வது இடம் பிடித்து சாதனை படைத்தது. தேசிய அளவிலான கேலோ இந்தியா 6வது இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜன.19ம் தேதி முதல் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடந்தது. இந்தப் போட்டியை சென்னையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 524 வீரர், வீராங்கனைகள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 6000 பேர் பங்கேற்றனர். போட்டி நடைபெறும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், போட்டிகள் நடைபெற்ற அரங்கங்கள் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டிருந்தன. வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான தங்குமிடம், போக்குவரத்து, உணவு வசதிகள் தரமாக செய்யப்பட்டு இருந்தன.

தொடக்கத்தில் இருந்தே அபாரமாக செயல்பட்ட தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தினர். அதிலும் தடகள போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தமிழ்நாடு கைப்பற்றியது. மேலும், பதக்கப்பட்டியலில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு மாறி மாறி இடம் பிடித்து முன்னிலை வகித்தது. கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நேற்றுடன் முடிந்தது. அதன் முடிவில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை வென்று 2வது இடத்தை பிடித்தது. அதுமட்டுமன்றி இதற்கு முன் நடந்த 5 இளைஞர் கேலோ இந்தியா போட்டியில் அதிகபட்சமாக 5வது இடத்தை பிடித்திருந்த தமிழ்நாடு, முதல் முறையாக 2வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

மகாராஷ்டிரா 57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 158 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. அடுத்து அரியானா 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் 3வது இடத்தை பெற்றது. புதுச்சேரி மாநிலம் தலா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று 29வது இடத்தில் உள்ளது. போட்டிகள் நேற்று பிற்பகலுடன் முடிந்த நிலையில் நிறைவு விழா நேற்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. அதில் அதிக போட்டிகளில் வென்று சாம்பியன் பெற்ற மாநிலங்களுக்கு கோப்பைகளையும், கேடயங்களையும், சிறந்த சாதனையாளர்களுக்கான விருதுகளையும் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு பதக்க வேட்டையில் தமிழ்நாடு சாதனை: முதல் முறையாக 2வது இடம் பிடித்து அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: