இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

சென்னை:பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணை: கொரோனா தொற்று காலத்தில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை குறைக்கும் வகையில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, அதை செயல்படுத்த ரூ.199 கோடியே 96 லட்சத்துக்கு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை திட்டமிடுதல், செயல்படுத்தல், கண்காணிக்க மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான குழுக்களை அரசு அமைத்துள்ளது. இதற்காக கடந்த ஆண்டுகளில் பல கோடி ரூபாய் நிதியையும் அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், இல்லம்தேடிக் கல்வித் திட்டத்தின் சிறப்பு அலுவலர், 2023-2024லிலும் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.191 கோடியே 90 லட்சத்துக்கு நிதி ஒப்புதல் கோரி கடிதம் எழுதியுள்ளார். தற்போதுள்ள 1.80 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள் 1.25 லட்சமாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.100 கோடி நிதியை பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கீடு செய்தது. மேலும், சிறப்பு அதிகாரி இந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதல் நிதி மற்றும் செலவினங்களாக ரூ.122 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரம் ஒதுக்கவும் கேட்டிருந்தார். அவரின் முன்மொழிவை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை 2023-2024ல் செயல்படுத்த ரூ.100 கோடிக்கு அனுமதி அளித்து உத்தர விடுகிறது.

The post இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: