வட சென்னை வளர்ச்சிக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு; மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மொத்தம் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜெயராமன்; எனது வார்டில் புயலால் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. முருகப்பா நகர் குளத்தில் அருகில் மின்சார கம்பங்கள் அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை’’ என்றார்.

மேயர் பிரியா; மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விழுந்த மின்சார கம்பங்கள் மாற்றப்படுகிறது. மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு; வடசென்னை வளர்ச்சி நிதி எந்த நிலையில் உள்ளது. சின்ன, சின்ன பணிகள் கூட வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என்று கூறுகிறார்கள். எந்தெந்த திட்டங்களுக்கு தான் அந்த பணம் ஒதுக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பு அதிகாரி யார்?

ஆணையர் ராதாகிருஷ்ணன்; மாநில அரசு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சிஎம்டிஏ மூலம் வளர்ச்சி நிதி தரப்படுகிறது. இது பல்வேறு துறைகளுக்கு செலவிடப்படும். எந்தெந்த பணிகளுக்கு இந்த பணம் ஒதுக்கப்படும் என்ற தகவலை இன்றைய கூட்டம் முடிந்த பின் உறுப்பினர்களுக்கு தருகிறேன்.

மேயர் பிரியா; வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, குடிநீர், சாலை, பூங்கா, மருத்துவம் என அனைத்து துறைகளுக்கும் சேர்த்துதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ ஆய்வுக்கூடத்தில் விவரங்கள் பெற்று என்னென்ன பணிகள் நடைபெறுகிறது? எந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அனைத்து விவரங்கள் வெளியிடப்படும்.

ஜெ.டில்லி பாபு (காங்கிரஸ்); கொடுங்கையூர் பகுதியில் பயோமைனிங் திட்டப்படி குப்பை கிடங்கு சரி செய்யப்பட்டு நிலங்கள் மீட்கப்படும் என்று கடந்த ஆண்டு கூறினீர்கள். இதற்கு டெண்டர்விட்டது மாதிரியும் தெரியவில்லை.

மேயர் பிரியா; வெகு விரைவில் பயோ மைனிங் திட்ட டெண்டர் விடப்படும்.

பருதி இளம் சுருதி திமுக; இயற்கை பேரிடர் வருவதை யாராலும் கணிக்க முடியாது. மழைக் காலங்களில் சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது திமுக அரசுடன் சென்னை மாநகராட்சி இணைந்து மீட்பு நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது.

காங்கிரஸ் கவுன்சிலர் சுகன்யா செல்வம்; வடகிழக்கு பருவ மழை முடிந்த நிலையில் மழை பாதிப்புகளால் சாலைகள் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டது. தற்போது சாலைகள் அனைத்தும் சரிசெய்யும் வகையில் எனது வார்டுக்கு உட்பட்ட சூளைமேடு பகுதியில் பல்வேறு தெருக்களில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மின்வாரிய அதிகாரிகள், பணி செய்யும்போது சாலைகளை சேதப்படுத்திவிடுகின்றனர். எனவே, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆணையர் ராதாகிருஷ்ணன்; புதிதாக போடப்பட்ட சாலைகளை சென்னை மாநகராட்சி அனுமதி இல்லாமல் எந்த துறை சார்ந்த பணியாளர்களும் தோண்டக்கூடாது. இது தவறான செயல். மின்வாரிய நிர்வாகத்திடம் இதுதொடர்பாக பேசுகிறேன். இதுபோன்று சாலைகள் யாராவது தோண்டினால் அவற்றை உதவி பொறியாளர்கள் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன். இவ்வாறு பேசினர்.இதையடுத்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

The post வட சென்னை வளர்ச்சிக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு; மேயர் பிரியா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: