கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி குதிரைகுத்தி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்களுக்கு மேலான நிலையில், இக்கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக பணி நடைபெற்று முடிவற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், கும்ப அலங்காரத்துக்கு பிறகு முதல் கால யாக பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜை துவங்கி பிம்ப சுத்தி, கோ பூஜை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை சுமந்து கோயிலை வளம்வந்து கோயில் விமானத்தில் உள்ள மூலவர் கலசத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகா தீபாரதனை காண்பித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஆச்சாள்புரம் சம்பந்த சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை குதிரைகுத்தி மற்றும் காமராஜ் நகர் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.

The post கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் திரவுபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: