ஆளுநர் ஆர்.என்.ரவி கீழ்வெண்மணி சென்ற விவகாரம் அரசியல் ஆதாயத்திற்காக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?: செயற்பாட்டாளர் சுப்பிரமணி கண்டனம்

சென்னை: கீழ்வெண்மணிக்கு ஆளுநர் வந்தது ‘வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல; இதில் அரசியல் செய்ய வேண்டாம் என கீழ்வெண்மணி படுகொலையில் இருந்து தப்பி வந்த சுப்பிரமணி பேட்டியளித்துள்ளார்.  சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கீழ்வெண்மணி செயற்பாட்டாளர் சுப்பிரமணி நேற்று அளித்த பேட்டி: நாகை மாவட்டம், கீழ்வெண்மணி கிராமத்தில் கடந்த 1968 டிச.25ம் தேதி மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திய நாளாக அமைந்தது. அந்த காலம் என்பது பல லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பண்ணையார்களால் அடக்கப்பட்டு வந்தனர். விவசாய வேலைகளைச் செய்த விவசாய தொழிலாளர்கள் ‘கூலி உயர்வு’ கேட்டபோது, அந்த உழைக்கும் மக்கள் மீது, பழி தீர்க்கத் திட்டமிட்ட நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரும், அவரது கூட்டமும், கீழ்வெண்மணி கிராமத்தின் மீது படையெடுத்தனர். அதன் விளைவாக 44 உயிர்களை ஒரே குடிசைக்குள் அடைத்து எரித்து கொலை செய்தனர். இந்த கொடிய கொலைக்கு தலைமை தாங்கிய கோபால கிருஷ்ண நாயுடு உட்பட பண்ணையாளர்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பின்னர், அவர்கள் இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார்கள் என உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

அதன் பின், 12 ஆண்டுகள் கழித்து கடந்த 1980ல் முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை நக்சல் பாரி புரட்சியாளர்கள் பழிக்கு பழி வாங்கியதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அத்தகைய கிராமமான கீழ்வெண்மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 28ம் தேதி வந்திருந்தார். ஏற்கனவே நாங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம் எனவும், எங்களை வைத்து ஆளுநர் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம். நலிந்த மக்களை வைத்து தேர்தல் நேரத்தில் ஆளுநர் அரசியல் செய்வது எங்களுக்குப் பிடிக்கவில்லை.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி கீழ்வெண்மணி சென்ற விவகாரம் அரசியல் ஆதாயத்திற்காக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?: செயற்பாட்டாளர் சுப்பிரமணி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: