காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்த்து போராடுவோம்: மல்லிகார்ஜுன கார்கே, கமல்ஹாசன் உள்ளிட்டோர் புகழஞ்சலி

டெல்லி: தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 30ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உயிர்த்தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் தியாகிகள் தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவரின் புகழ் குறித்து பலர் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, காந்தியின் நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்த வகையில்,

மல்லிகார்ஜுன கார்கே புகழஞ்சலி:

தியாகிகள் தினத்தில், நமது தேசத்தின் தார்மீக திசைகாட்டியான மகாத்மா காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

அவரது இலட்சியங்களையும், சிந்தனைகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் போராட உறுதியளிக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவைப் பாதுகாக்கவும், நம் மக்களிடையே நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தவும் அனைத்தையும் செய்வோம் என பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் புகழஞ்சலி:

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை புகழஞ்சலி:

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அகிம்சை எனும் போராட்ட தத்துவத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று, உலகத் தலைவர்கள் பலருக்கு வழிகாட்டிய, மகாத்மா காந்தி அவர்கள் நினைவு தினமான இன்று, அவரது சுதந்திரப் போராட்டத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். சுதந்திர இந்தியாவுக்கான மகாத்மாவின் கனவுகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி, அவருக்கு உண்மையான அஞ்சலி செலுத்தி வருகிறது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இணையமைச்சர் எல்.முருகன்:

தேசத்திற்காக காந்தி செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து பொற்றுவோம் என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தேசத்தின் சுதந்திரத்துக்காக அமைதியான அகிம்சை முறையில் போராடியவர் காந்திஜி எனவும் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜி.கே.மணி புகழாரம்:

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளில் அவரை நினைவில் கொள்வோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார். காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

மகாத்மா காந்தியடிகள்
நினைவு நாள்
நினைவு கூறுவோம்!
நாட்டைக் காப்போம்!
உறுதி ஏற்போம்! – ஜி.கே.மணி

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளில் அவரை நினைவில் கொள்வோம். அவர் கண்ட கனவை நனவாக்குவோம். மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்று போராடி பெற்ற சுதந்திரத்தால் நாம் எல்லா உரிமைகளையும் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது நாடு கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற பல்வேறு நிலைகளில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சிக்கு இணையாக வன்முறை, தீவிரவாதம், தீய சக்தியும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இவற்றை அகற்ற வேண்டும்.

எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. இன்னும் வறுமை ஒழியவில்லை. இது என் நாடு, எந்நாட்டு மக்கள், என் நாட்டுக்காகவும், எந்நாட்டு மக்களுக்காகவும் என்னால் இயன்ற அளவு, சேவை நோக்கோடு அர்ப்பணிப்புடன், நாட்டுப்பற்றுடன் பணியாற்றுவோம். காந்தியடிகள் கண்ட கனவை நனவாக்க வளத்தை பெருக்க, வலிமையை உருவாக்க உறுதி ஏற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்த்து போராடுவோம்: மல்லிகார்ஜுன கார்கே, கமல்ஹாசன் உள்ளிட்டோர் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: