மொடக்குறிச்சி பகுதியில் சாலை பணிக்கு கொட்டிய ஜல்லிக்கற்கள் தொடரும் விபத்து; பொதுமக்கள் புகார்

 

ஈரோடு, ஜன.30: மொடக்குறிச்சி குலவிளக்கு ஊராட்சியில் சாலை சீரமைப்பு பணி பாதியில் நிற்பதால் சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களால் விபத்து சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலவிளக்கு ஊராட்சியில் கூட்டு எல்லைக்காடு வாய்க்கால்மேடு பஸ் ஸ்டாப்பில் இருந்து சிவகிரி செல்லும் மின்னப்பாளையம் பிரிவு சாலையானது கடந்த பல ஆண்டுகளக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சாலை சீரமைக்கும் பணியை மேற்கொண்டது.

அப்போது சாலையில் சிறு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. அதன்பின்னா் சாலை சீரமைப்பு பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் ஜல்லிகற்கள் பெயர்ந்து வாகன ஓட்டிகளை பதம் பார்த்து வருகின்றது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஜல்லி கற்களில் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி சசி கூறியதாவது:

கூட்டு எல்லக்காடு கிராமத்தில் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொட்டப்பட்டது. அதன்பின்னர் பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கொள்ளும் நிலை இருந்து வருகின்றது. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

The post மொடக்குறிச்சி பகுதியில் சாலை பணிக்கு கொட்டிய ஜல்லிக்கற்கள் தொடரும் விபத்து; பொதுமக்கள் புகார் appeared first on Dinakaran.

Related Stories: