கழிவுநீர் பாதை அடைப்பினால் நோய் பரவும் அபாயம்; மக்கள் சாலைமறியல்; தாம்பரம் ஆர்டிஓ சமரசம்

தாம்பரம்: சென்னை தாம்பரம் அருகே நெடுங்குன்றம் ஊராட்சியில் எஸ்எஸ்எம் நகர், எம்சிபி நகர், டிவிஎஸ் விலாஸ், என்ஜிஓ நகர் பகுதிகளில் ஏராளமான தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அதிகளவில் வெளியேற்றப்படும் கழிவுநீர், அங்குள்ள ஏரிக்கு செல்லும் கால்வாயில் கலந்து, அதன் வழியே புத்தூர் ஏரியில் கலந்து வந்திருக்கிறது. இதனால் இந்த ஏரிநீரை மட்டுமே நம்பியுள்ள ஆலப்பாக்கம் கிராம மக்கள் மற்றும் 3 அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரினால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கழிவுநீர் செல்லும் கால்வாயை மண்ணை கொட்டி மூடினர். அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மண்ணை அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவுநீர்வெளியேற்றப்படுவதை தடுக்க வலியுறுத்தி, நேற்று மாலை பாதிக்கப்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளா மற்றும் அதிகாரிகள், சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தனியார் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு ஆர்டிஓ எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கழிவு நீர் வெளியேறும் பகுதிகள் அனைத்தையும் முழுமையாக மூடுவதாக கிராம மக்களிடம் ஆர்டிஓ உறுதியளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படும் பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால், அவ்வளாகத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி, தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினர் லாரிகள் மூலம் கழிவுநீரை வெளியேற்றாமல் அப்படியே விட்டுவிட்டதுதான் காரணம் என்று மக்களிடையே புகார் எழுந்துள்ளது.

இதனால் அந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை சுற்றிலும் கடந்த 2 நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால், அங்கு வசிக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையிலான பலருக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கழிவுநீர் பாதை அடைப்பினால் நோய் பரவும் அபாயம்; மக்கள் சாலைமறியல்; தாம்பரம் ஆர்டிஓ சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: