அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவின் முதல் கூட்டம் : கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்? மக்களவை தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என ஆலோசனை!!

சென்னை: சென்னையில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகி வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதால் அரசியல் களத்தில் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் அதிமுகவில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

இதில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும், கூட்டணி கட்சிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தை குறித்தும் ஆலோசிக்கின்றனர்.2019ம் ஆண்டு தேர்தலின் போது, பாஜகவுடன் அமைத்த கூட்டணியை விட்டு விலகுவதாக அதிமுக ஏற்கனவே அறிவித்துள்ளது. கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்டவை பாஜக கூட்டணியில் தொடர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த.மா.கா., புதிய தமிழகம் கட்சிகள் அதிமுக கூட்டணியில் தொடர்கிறதா? இல்லையா? என அறிவிக்காமல் உள்ளன.

ஆகவே தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளை கூட்டணியில் தொடர வைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் சில புதிய கட்சிகளை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொகுதி பங்கீட்டு குழுவை தொடர்ந்து அதிமுக பிரச்சாரக் குழு, விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

The post அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவின் முதல் கூட்டம் : கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்? மக்களவை தேர்தலை எப்படி எதிர்கொள்வது? என ஆலோசனை!! appeared first on Dinakaran.

Related Stories: