கெடுதல் நினைப்பவர்கள் கெட்டுப் போவார்கள்: அதிமுகவை அழிக்க நினைத்தார்கள் அழிந்து போனார்கள் இபிஎஸ் சாபம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூர் வந்தார். வல்லத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது: நான் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு முதல் முதலாக வந்துள்ளேன். இங்கிருக்கும் கூட்டம் நமக்கு எதிரே எதிரிகளே இல்லை என்பதை நிரூபித்து காட்டுகிறது.  இந்த இயக்கத்திற்கு எவ்வளவு துரோகம் செய்தார்கள். அழிக்கவும், முடக்கவும் பார்த்தார்கள். அத்தனையும் ஒழித்து கட்டப்பட்டு விட்டது. நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்றோம். தேர்தல் ஆணையத்தின் மூலமாக நல்ல தீர்வை கண்டோம். அதிமுகவை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

நமக்கு யார் கெடுதல் நினைத்தாலும், அவர்கள் தான் கெட்டு போவார்கள். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தார்கள், அழிந்து போனார்கள். இந்த இயக்கத்தை கெடுக்க நினைத்தார்கள், கெட்டு போனார்கள். கிளை செயலாளராக கூட்டத்தில் நின்ற நான் தற்போது மேடைக்கு வந்து இருக்கிறேன். நீங்களும் இவ்வாறு வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.

* எவ்வளவு தொகுதி இருக்குனு கூட தெரியல…

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மதுக்கூர் பகுதிகளில் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரத்தநாட்டில் கட்சிக் கொடியேற்றி பேசினார். அப்போது, தமிழகத்தில் 30, புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதி இருப்பதாக பேசினார். அவரது இந்த பேச்சைக் கேட்டு அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதன்பின்னும் அவர் தனது தவறை திருத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் மொத்தம் எத்தனை நாடாளுமன்ற தொகுதி இருப்பது என்பது கூட தெரியாத எதிர்க்கட்சி தலைவரா என்று மக்கள் கிண்டலடித்தனர்.

The post கெடுதல் நினைப்பவர்கள் கெட்டுப் போவார்கள்: அதிமுகவை அழிக்க நினைத்தார்கள் அழிந்து போனார்கள் இபிஎஸ் சாபம் appeared first on Dinakaran.

Related Stories: