கார் – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து 6 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி: குற்றாலத்தில் குளித்து விட்டு திரும்பிய போது சோகம்

கடையநல்லூர்: புளியங்குடி அருகே நேற்று அதிகாலை காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (24). இவரது நண்பர்கள் அதே தெருவைச் சேர்ந்த வேல்மனோஜ் (32), சுப்பிரமணியன் (27), முகேஷ் (எ) மனோ (29), புளியங்குடி ஆர்எஸ்கேபி ரோட்டைச் சேர்ந்த போத்திராஜ் (30), பழநியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (35). இவர்களில் முத்தமிழ்செல்வன் முகேஷ் (எ) மனோவின் அக்காள் மாப்பிள்ளை ஆவார்.

மற்ற 5 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்கள் அனைவரும் புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவுக்கு சென்று உள்ளனர். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் கார்த்திக் தனது உறவினர் கடையநல்லூர், குமந்தாபுரத்தைச் சேர்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு குற்றாலத்திற்கு புறப்பட்டார். அவருடன் வேல்மனோஜ், போத்திராஜ், சுப்பிரமணியன், முகேஷ் (எ) மனோ, முத்தமிழ்செல்வன் ஆகிய 5 பேரும் சென்றனர்.

குற்றாலத்தில் அருவிகளில் குளித்துவிட்டு நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் புளியங்குடிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கார்த்திக் ஓட்டினார். மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையான புளியங்குடி அருகே கார் வந்தபோது, எதிரே கர்நாடக மாநிலம் பெல்லாரியிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு சிமென்ட் மூடைகளை ஏற்றிக் கொண்டு லாரி எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி வந்த கார்த்திக் மற்றும் வேல்மனோஜ், போத்திராஜ், சுப்பிரமணியன், முகேஷ் (எ) மனோ ஆகிய 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த முத்தமிழ்செல்வனை மீட்டு பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

* தலா ரூ.2 லட்சம்: முதல்வர் நிதியுதவி

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post கார் – லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து 6 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி: குற்றாலத்தில் குளித்து விட்டு திரும்பிய போது சோகம் appeared first on Dinakaran.

Related Stories: