சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் நுரையீரல் மருத்துவ மாநாடு: 200 நிபுணர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையின் சுவாச மருத்துவப் பிரிவு சார்பில் நுரையீரல் மருத்துவத்தில் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்களை எடுத்துரைக்கும் வகையில் “அப்போலோ செஸ்ட் அப்டேட் 2024” என்ற மாநாடு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் நுரையீரல் மருத்துவ நிபுணர்களுக்காக நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

200க்கும் மேற்பட்ட நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாடு குறிப்பாக இடைநிலை நுரையீரல் நோய்களைக் கண்டறிதல், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலைமைகள் மற்றும் சிகிச்சை குறித்து கவனம் செலுத்தியது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை இயக்குநர் சுனிதா ரெட்டி கூறியதாவது: நுரையீரலியல் சிகிச்சைப் பிரிவு எப்போதுமே ஒரு முக்கியமான பிரிவாக இருந்து வருகிறது. இதுபோன்ற மாநாட்டுத் தளங்கள் இந்த துறையில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்களை எடுத்துக் காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மேலும் கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிந்தைய சூழலில் எங்கள் சிகிச்சை நடைமுறைகளை மதிப்பீடு செய்ய உதவும். சரியான நேரத்தில் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பது போன்ற நடைமுறைகள் நோய்கள் அதிகரிப்பதைக் தடுக்கும். காசநோய், சார்கோயிடோசிஸ், நுரையீரல் புற்றுநோய் போன்றவை தொடர்பாகவும் இத்துறையில் சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான அதிநவீன நடைமுறைகள் தொடர்பாகவும் இந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் நுரையீரல் மருத்துவ மாநாடு: 200 நிபுணர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: