நாடு முழுவதும் வெறுப்பு, வன்முறை பரப்பப்படுகிறது: ஒன்றிய பாஜ அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

சிலிகுரி: நாடு, முழுவதும் வெறுப்பு,வன்முறையை ஒன்றிய அரசு பரப்புகிறது என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை முடிந்து கடந்த 25ம் தேதி மேற்கு வங்கத்திற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வந்தார்.இரண்டு நாள் ஓய்வுக்கு பின்னர் மேற்கு வங்கத்தில் உள்ள பாக்டோக்ராவுக்கு ராகுல் நேற்று வந்தார். பாக்டோக்ரா விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுலை மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் தலைவர்கள் வரவேற்றனர்.

ஜல்பைகுரி நகரில் யாத்திரையை தொடங்கி நகரின் பல பகுதிகளுக்கு காரில் சென்றாா். சிலிகுரி பகுதியில் ராகுல் காந்தி பேசுகையில்‘‘ராணுவத்தில் குறுகிய கால பணியான அக்னிவீரர் திட்டத்தை அறிமுகப்படுத்தி, படையில் சேர விரும்பும் இளைஞர்களை ஒன்றிய அரசு கேலிக்கூத்தாக்கியுள்ளது. நாடு முழுவதும் வெறுப்பும் வன்முறையும் பரப்பப்படுகிறது. இது எந்த நோக்கத்திற்கும் உதவாது. வெறுப்பைப் பரப்புவதற்குப் பதிலாக, இளைஞர்களுக்கு அன்பையும் நீதியையும் பரப்புவதற்கு நாம் உழைக்க வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே ஒன்றிய அரசு செயல்படுகிறது, ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்காக அல்ல. மேற்கு வங்கத்தில் எனக்கு அளித்த வரவேற்புக்காக மக்களுக்கு நன்றி. வங்கத்திற்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சுதந்திரப் போராட்டத்தின் போது சித்தாந்தப் போராட்டத்தை வங்காளம் முன்னெடுத்தது. தற்போதைய சூழ்நிலையில் வெறுப்புக்கு எதிராக போராடுவதற்கும் தேசத்தை பிணைப்பதற்கும் வழி காட்டுவது வங்காளிகளின் கடமையாகும்.

இந்த சூழ்நிலையில் நீங்கள் வரவில்லை என்றால், மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்’’ என்று கூறினார். இன்று வடக்கு தினாஜ்பூரில் உள்ள இஸ்லாம்பூருக்கு அவர் செல்கிறார். அங்கிருந்து யாத்திரை பீகாருக்குள் நுழைகிறது. அதன் பின்னர் 31ம் தேதி மால்டா நகருக்கு வரும் அவர் மேற்கு வங்கத்தில் மீண்டும் யாத்திரையை தொடர்வார்.

The post நாடு முழுவதும் வெறுப்பு, வன்முறை பரப்பப்படுகிறது: ஒன்றிய பாஜ அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: