கேத்தி-பாலாடா சாலையில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை

 

ஊட்டி, ஜன.28: கேத்தி-பாலாடா சாலையில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி அருகே உள்ள கேத்தி பகுதியில் இருந்து பாலாடா மற்றும் சேலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இவ்வழித்தடத்தில் நாள் தோறும் ஏராளமான அரசு மற்றும் மினி பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் பாலாடா பகுதியிலிருந்து ஏராளமான காய்கறி லாரிகள் மேட்டுப்பாளையம் உட்பட வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன.

மேலும், கேத்தி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு நாள் தோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கேத்தி பகுதியில் இருந்து பாலாடா செல்லும் சாலையில் கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அம்பேத்கர் நகர் வரை உள்ள சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இச்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் அவ்வப்போது இச்சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையில் வேகத்தடைகள் இல்லாத காரணத்தினாலே வாகன ஓட்டிகள் மிகவும் வேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அம்பேத்கர் நகர் வரை உள்ள இச்சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கேத்தி-பாலாடா சாலையில் வேகத்தடைகள் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: