பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்

*கோட்டாட்சியர் பேச்சு

விருத்தாசலம் : பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு ஏதுவாக ஒன்றியம் வாரியாக இரண்டடுக்கு குழு அமைக்கப்பட்டு அதன்படி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலத்தில் இரண்டடுக்கு குழு கூட்டம் நடைபெற்றது.கோட்டாட்சியர் சையத் மெக்மூத் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசும்போது, பள்ளி இடை நின்ற 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள்29 பேரை மீண்டும் வரவைத்து இந்த ஆண்டு நடைபெறக்கூடிய பொதுத்தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும்.

பள்ளிக்கு வராமல் இடைநிற்பதற்கு வாய்ப்புள்ள குழந்தைகள் அனைவரையும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். பள்ளி அளவில் முதல் அடுக்குக்குழுவினை பலப்படுத்த ஏதுவாக அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களையும், கிராம நிர்வாக அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதற்கேற்ற வகையில் வாட்ஸ்அப் குழு ஒன்று உருவாக்கி கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா, ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ், பள்ளி துணை ஆய்வாளர் சிவாஜி, வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா, தொழிலாளர் நல ஆய்வாளர் சார்லி, உதவியாளர் ராமகிருஷ்ணன், மேற்பார்வையாளர் குணசேகரன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர். இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

The post பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் appeared first on Dinakaran.

Related Stories: