தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீட்டு இயக்கம்: சங்க மாநில தலைவர் அறிக்கை

மதுராந்தகம்: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில், 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெருந்திரள் முறையீட்டு இயக்கத்தை வரும் பிப்ரவரி 2ம் தேதி நடத்துகிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வரும் பிப்ரவரி 2ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையிட்டு இயக்கம் நடைபெற உள்ளது.

இதில், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பரமானந்தம் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.4000 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்ட விதிகளின்படி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களின் பணி காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.

கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு பணி கொடை ஒரு லட்சம், ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு, தமிழக அரசு பணியாளர்களுக்கு பொருந்தும் விடுப்பு விதிகளை அனுமதிப்பதுடன், பென்ஷன் திட்டத்திலும் இணைக்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர ஊதியம் ஊராட்சி மூலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீட்டு இயக்கம்: சங்க மாநில தலைவர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: