சூடுபிடிக்க தொடங்கிய மக்களவை தேர்தல் களம்: ஜனவரி 28-ல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை

சென்னை: மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே ஜனவரி 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. வழக்கம் போல வருகிற ஏப்ரல், மே மாதங்களில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 மக்களவை தேர்தல் மார்ச் 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டு, மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்த முறை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால் முன்கூட்டியே, அதாவது அடுத்த மாத இறுதியில் தேர்தல் அட்டவணை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும், வடமாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே ஜனவரி 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. கூட்டணிக்கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரசுடன் திமுக பேச்சுவார்த்தையை தொடங்குகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

The post சூடுபிடிக்க தொடங்கிய மக்களவை தேர்தல் களம்: ஜனவரி 28-ல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: