ஊர் பெரியவர்களை தேரில் அமர வைத்து மரியாதை மாடு விடும் விழாவில் சுவாரஸ்யம் கே.வி.குப்பம் அருகே மகாபாரத போரை மையப்படுத்தி

கே.வி.குப்பம், ஜன.23: கே.வி.குப்பம் அருகே மாடு விடும் விழாக்களில் ஊர் பெரியவர்களை கிராம மக்கள் தேரில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து மரியாதை செலுத்தும் சம்பவம் சுவாரஸ்யமாக நடந்தது. வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் தாலுகா கீழ்முட்டுக்கூர், மற்றும் மேல்மாயில், அணைக்கட்டு தாலுகா விரிஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் ஆண்டு தோறும் மாடு விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இங்கு நடைபெறும் மாடு விடும் விழாவில், விழா தொடங்கும் முன் ஊர் பெரியோர்கள், ஊர் நாட்டாண்மை, மேட்டுக்குடி, உள்ளிட்ட 5 பேரை தேரில் அமர வைத்து, பவனி வருவது வழக்கம். அதுபோன்ற நேற்று மேல்மாயிலில் நடைபெற்ற மாடு விடும் விழாவில் ஊர் பெரியவர்கள் 5 பேரை அமர வைத்து மாடு ஓடிவரும், ஓடுபாதையில், மூன்று முறை ஓடுபாதையின் தொடக்கத்திலிருந்து, முடியும் வரை தேரில் அமர வைத்து, உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வு முடிந்த பின்னரே விழா தொடங்கும். இந்த தேரில் அமர வைத்து செல்லும் காட்சி, பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருந்தது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:

மகாபாரத இதிகாசத்தில் 18ம் போரில், பஞ்ச பாண்டவர்களாகிய, தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய 5 பேரும் தேரில் அமர்ந்து கர்ணனணை எதிர்த்து போர் புரிவர். அந்த தேரை ஓட்டி செல்லும் தேரோட்டியாக வருபவர் கிருஷ்ணன். இந்த மகாபாரத கதையை மையப்படுத்தி தான் எங்கள் ஊரில், இந்த தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் அமர்ந்து வருபவர்களுக்கு முன்னதாகவே வாக்கரிசி போட்டுவிட்டு தான் தேரில் அமர வைப்போம். ஏனெனில் தேர் சுற்றும் போது அவர்களுக்கு அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால், விழா நிறுத்துவதோடு, நேராக சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுவிடுவோம். அங்கேயே இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அடக்கம் செய்துவிடுவோம். ஆனால் இதுவரை அப்படியொரு எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் வழக்கமாகும். இதனை முதல் முறை காணும் பார்வையாளர்கள் என்ன இது சம்பிரதாயம் என்று வித்யாசமாக பார்ப்பதும் உண்டு’ என்றனர்.

The post ஊர் பெரியவர்களை தேரில் அமர வைத்து மரியாதை மாடு விடும் விழாவில் சுவாரஸ்யம் கே.வி.குப்பம் அருகே மகாபாரத போரை மையப்படுத்தி appeared first on Dinakaran.

Related Stories: