நாடாளுமன்ற தேர்தலுக்காக அயோத்தி ராமர் கோயில் திறப்பை அரசியல் ஆதாயமாக்குகின்றனர்: பாஜவின் சதி அரசியலை முறியடிக்க திருமாவளவன் அழைப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: அயோத்தியில் நடைபெறுவது கும்பாபிஷேகம் என்னும் குடமுழுக்கு நிகழ்வல்ல. ஏனெனில் இன்னும் கோயில் கட்டுமானப் பணிகள் முழுமையடையவில்லை. இது ஆன்மிக விழா என்னும் பெயரில் நடைபெறும் அரசியல் விழாவாக உள்ளது. இந்துக்களின் நம்பிக்கைக்கான பெருவிழா என்னும் பெயரில் நடத்தப்படும் சங்-பரிவார்களின் மதவெறி கொண்டாட்டத்தின் திருவிழா. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அப்பாவி இந்துக்களின் மத உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியல் ஆதாயமாகச் சுரண்டும் விழாவாக உள்ளது.

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வர சங்பரிவார்கள் கையாளும் இந்த அரசியல் உத்தியை, அப்பாவி இந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ஏழை எளிய இந்துக்களை மேம்படுத்துவதற்கு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் எதையும் செய்ய பாஜக முனைப்புக் காட்டவில்லை. ராமரின் பெயரால் நடக்கும் இந்து மக்களுக்கு எதிரான மாய்மால அரசியலின் உச்சம் தான் அயோத்தியில் அரங்கேறும் தேர்தல் பிரசார விழா. இதனை அனைத்துத் தரப்பு இந்துப் பெருங்குடி மக்களும் உணர்ந்து, சங்- பரிவார்களின் சதி அரசியலை முறியடிக்க அணிதிரள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

The post நாடாளுமன்ற தேர்தலுக்காக அயோத்தி ராமர் கோயில் திறப்பை அரசியல் ஆதாயமாக்குகின்றனர்: பாஜவின் சதி அரசியலை முறியடிக்க திருமாவளவன் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: