பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் சேதமடைந்த கால்வாயை சீரமைக்க கோரிக்கை

 

திருவள்ளூர், ஜன. 22: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து நீர் வரும் நீர் மற்றும் மழை நீர் சேமித்து வைக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் நீரானது சென்னை மக்களின் தேவைக்காக இணைப்புக் கால்வாய் மூலம் பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு அனுப்பப்படுவது வழக்கம். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தக்கம் 34.98 சதுர கில மீட்டர் பரப்பளவு கொண்டது.

மேலும் 16 பெரிய மதகுகளை கொண்டது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகவும், நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட உயரம் 35 அடியாகவும் உள்ளது. நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் இணைப்பு கால்வாய் மற்றும் பேபி கால்வாய் வழியாக சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக அனுப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு இணைப்புக் கால்வாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் கால்வாய் அரண்வாயல் பகுதியில் செல்லும் இணைப்பு கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்து தூர்ந்து போய் உள்ளது. பல்வேறு இடங்களில் சிமெண்ட் சிலாபுகள் சரிந்து கால்வாய் ஓரத்தில் கோரை புல் செடிகள் முளைத்து கால்வாய் முற்றிலும் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. எனவே இணைப்புக் கால்வாயில் உள்ள செடி, கொடிகளை அகற்றிவிட்டு, கால்வையை சீரமைத்து தண்ணீர் வீணாகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் சேதமடைந்த கால்வாயை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: