தை கிருத்திகையை முன்னிட்டு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் அறுபடை வீடு அரங்குகள் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார்

திருப்போரூர், ஜன.20: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போற்றும் விழாவில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தை கிருத்திகையையொட்டி, திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றை ஒரே இடத்தில் காணும் வகையில், அறுபடை வீடு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த, அரங்குகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, துணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திறந்து வைத்தனர். இதில், கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருப்போரூர் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அங்குள்ள சத்திரம் ஒன்றில் தங்கி காலையில் சரவணப்பொய்கை குளத்தில் நீராடினார். இதனைத்தொடர்ந்து, நேற்று காலை அறுபடை வீடு அரங்குகளை பார்வையிட்டு, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், கோயில் வாயில் முன்பு பிரசாதம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தைக் கிருத்திகை, தைப்பூச நாட்களில் அனைத்து முருகன் கோயில்களிலும், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு, நாள் முழுவதும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. இந்த, கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த ₹3 கோடி மதிப்பிலான அன்னதானக் கூடம், திருமண மண்டபம், தங்கும் விடுதி போன்றவற்றை கூடுதல் வசதிகள் செய்து திறந்து வைத்துள்ளோம்.

மேலும், ₹94 லட்சம் செலவில் கோயில் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. ₹6 கோடியே 65 லட்சம் செலவில் பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. சிதம்பர சுவாமிகள் மடத்தின் திருக்குளம் ₹47 லட்சம் செலவில் நவீனமயமாக மாற்றப்பட உள்ளது. கோயில் என்றாலே சுத்தமாகத்தான் இருக்கும். சுத்தமாக இருக்கும் கோயிலை சுத்தப்படுத்துகிறேன் என்று கூறி பாஜ தலைவர் அண்ணாமலை, பாம்பன் சுவாமி கோயிலுக்குச் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு வந்துள்ளார். மீடியா வெளிச்சத்திற்காக அவர் இதையெல்லாம் செய்கிறார். நம் மாநில கவர்னரும், இந்த வேலையை கையில் எடுத்துள்ளார்.

முழு நேர அன்னதான திட்டம் 8 கோயில்களில் செயல்படுத்தப்படுகிறது. வருகிற பட்ஜெட்டுக்கு பிறகு மேலும் 3 கோயில்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படும். ஒரு நாளைக்கு 92,000 பக்தர்கள், கோயில்களில் அன்னதானம் அருந்துகின்றனர். இதற்காக ஒரு ஆண்டிற்கு, ₹105 கோடி செலவிடப்படுகிறது. பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி உள்ளது. இதுவரை 1,225 கோயில் குட முழுக்குகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் 1,316 கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தி முடிக்கப்படும். இதுவரை கோயில்களுக்கு சொந்தமான ₹5,557 கோடி மதிப்புள்ள 6221 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. முருகன் கோயில்களில் மட்டும் ₹731 கோடி செலவில் 411 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், 1959ம் ஆண்டிற்கு பிறகு இப்போதுதான் அதிக பணிகள் அறநிலையத்துறையால் செய்யப்படுகிறது. அதிக வருவாய் உள்ள கோயில்கள் உதவி ஆணையர், துணை ஆணையர் போன்ற நிலைகளுக்கு விரைவில் தரம் உயர்த்தப்படும். இதேபோன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் வடகலை, தென்கலை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு மனம் இல்லை. அவர்களாக மனம் மாறினால்தான் இதற்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து, நேற்று காலை 10 மணிக்கு புலவர் மா.ராமலிங்கம் தலைமையில், மனிதவளம் செழிப்பதற்கு பெரிதும் துணை நிற்பது `அறிவியலா, ஆன்மீகமா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில் அறிவியலே என்ற தலைப்பில் விஜயகிருஷ்ணன், ஜெய, திலகவதி ஆகியோரும், ஆன்மீகமே என்ற தலைப்பில் அன்பு, சதாசிவம், மோகனாம்பாள் ஆகியோரும் பேசினர். இதனைத்தொடர்ந்து, மாலை 5 மணிக்கு கலா பாரத் மற்றும் தேஜஸ் குழுவினரின் திருக்குற்றால குறவஞ்சி பரத நாட்டிய நாடகமும், மாலை 6.30 மணிக்கு சுசித்ரா பாலசுப்ரமணியன் குழுவினரின் பக்தி இன்னிசையும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இரவு சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி – தெய்வானையுடன் முருகப்பெருமான், முக்கிய 4 மாட வீதிகளின் வழியாக உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்போரூர் கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் குமரவேல் செய்திருந்தார்.

வல்லக்கோட்டை கோயிலில் சிறப்பு அபிஷேகம்
பெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், தை கிருத்திகையை முன்னிட்டு மூலவர் வள்ளி – தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவர் கோடையாண்டவருக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரமும், உற்சவருக்கு ரத்தினாங்கியுடன் மயில்வாகன அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, `அரோகரா அரோகரா’ என்று கோஷமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர். தை கிருத்திகையையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லஷ்மிகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post தை கிருத்திகையை முன்னிட்டு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் அறுபடை வீடு அரங்குகள் திறப்பு: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: