திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கம் புறப்பட்டார். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார். 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்காக சென்னையில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்கிறார்.

திருச்சி சென்றுள்ள பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்கிறார். 10.20 மணிக்கு ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைகிறார். 10.50 மணிக்கு சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி, 11 – 12.30 வரை சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கிவைத்த பிரதமர் மோடி நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார்.

திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு:

பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள், கட்சி பிரமுகர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றங்கரையோர பகுதிகளில் தீவிர பாதுகாப்பு:

பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் அருகே பஞ்சக்கரை பகுதியில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கவுள்ள நிலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரை பகுதியில் இருந்து சாலை வழியாக ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் பிரதமர் மோடி செல்கிறார். திருவானைக்காவல் சோதனைச்சாவடி முதல் பஞ்சகரை சாலை வரை போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்த பிறகு திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு:

பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நாளை மதுரை விமான நிலையம் வந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் டெல்லி செல்ல உள்ள நிலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரையில் பாதுகாப்பு பணிகளில் 1,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: