சித்தார்காடு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் ₹1.25 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

மதுராந்தகம், ஜன.20: சித்தார்காடு ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு ₹1.25 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் சித்தர்காடு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த்குமார், ஆர்டிஓ தியாகராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சிற்றரசு அனைவரையும் வரவேற்றார். இதில், அந்த கிராமத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, பள்ளிக்கல்வி, சுகாதாரம், சமூக நலன், கால்நடை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு, சிறப்புரையாற்றினார். மேலும், 98 பயனாளிகளுக்கு ₹1.25 கோடி மதிப்பிட்டில் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, தையல் இயந்திரம், சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி, நலவாரிய அட்டை, தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு வகையான மரக்கன்றுகள், பழ செடிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், கால்நடைத்துறை சார்பில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமில், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து மருத்துவர்களிடம் காண்பித்து மருந்து, மாத்திரைகளை பெற்றுச்சென்றனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஏழுமலை, துணை பெருந்தலைவர் பிரேமா சங்கர், மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிக்குமார், கவுன்சிலர் தமிழினி, வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சித்தார்காடு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் ₹1.25 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: