குடியரசு தின விழா அணிவகுப்பு மெரினா காமராஜர் சாலையில் முப்படை வீரர்கள் ஒத்திகை: மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடந்தது

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஒத்திகை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. குடியரசு தின விழா வரும் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை இணைந்து செய்து வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக, மெரினா காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறும். ஆனால் மெரினா காந்தி சிலை அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், 2வது ஆண்டாக இந்த ஆண்டும் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

குடியரசு தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதன் பிறகு தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த வாகன அணிவகுப்புகளும் நடைபெறும். எனவே குடியரசு தின முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை 7.30 மணிக்கு மெரினா காந்தி சிலையில் இருந்து போர் நினைவு சின்னம் வரை நடந்தது. இதில், தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆர்.பி.எப் வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் என போலீசாரின் வாகன ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் காவல்துறை அதிகாரிகள் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த பாதுகாப்பு ஒத்திகையால் மெரினா காமராஜர் சாலையில் நேற்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் ஒத்திகையின் போது மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். இந்த ஒத்திகை வரும் 22 மற்றும் 24ம் தேதிகளிலும் நடக்கிறது.

The post குடியரசு தின விழா அணிவகுப்பு மெரினா காமராஜர் சாலையில் முப்படை வீரர்கள் ஒத்திகை: மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: