முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி இன்று பயணம் சேலத்தில் நாளை திமுக இளைஞர் அணி மாநாடு: பிரமாண்ட டிரோன் ஷோவுக்கு ஏற்பாடு

சேலம்: சேலத்தில் நாளை திமுக இளைஞர் அணி மாநாடு நடக்கிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலம் செல்கின்றனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (21ம் தேதி) திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு மிகப் பிரமாண்டமாக நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சேலம் செல்கின்றனர். மாலை 5 மணிக்கு, சேலம் காமலாபுரம் விமான நிலையம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.என்.நேரு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இருவரும் காரில் மாநாட்டு பந்தலுக்கு செல்கின்றனர். வழிநெடுகிலும் திமுகவினர் வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மாநாடு திடலுக்கு வரும் முதல்வர், ஏற்பாடுகளை பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளுடன் உரையாடுகிறார்.

அப்போது, சென்னையில் இருந்து புறப்பட்ட சுடர் ஓட்ட தீபம் ஒப்படைக்கப்படுகிறது. இங்கு சுடர் தீபத்தை முதல்வர் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து முரசொலி புத்தக சாலை மற்றும் இதர கண்காட்சிகளை திறந்து வைக்கிறார். பின்னர், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏற்கனவே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சுற்றுப்பயணம் வந்த 1,500 பேர் மேற்கொண்ட பைக் பேரணி மாநாட்டு திடலுக்கு வருகிறது. இதில் அமைச்சர் உதயநிதி தொடங்கி கலந்து கொள்கிறார். அதன்பின்னர் இதுவரை நடக்காத அளவிற்கு, ஒரு புதிய முறையில் ஆயிரம் ட்ரோன் கேமரா ஷோ புதிய தொழில்நுட்பத்தின்படி, சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின் முதல்வர் ஓய்வெடுக்கச் செல்கிறார். நாளை மாநாட்டில் பங்கேற்கிறார்.

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக நாளை காலை 9 மணிக்கு திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி., கொடியேற்றுகிறார். காலை 9.45 மணிக்கு இளைஞரணி செயலாளரை, மாநாட்டின் தலைவராக முன்மொழிந்து, வழிமொழிந்து, பேச ஆரம்பித்து மாநாடு தொடங்குகிறது. பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்படுகிறது. காலை 11 மணிமுதல் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் 20க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் பேசுகின்றனர். மாலை 4 மணிக்கு கனிமொழி எம்பி., அதனை தொடர்ந்து மாநாட்டு தலைவரும், இளைஞரணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

பின்னர், திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மாநாட்டு நிறைவு பேரூரையாற்றுகிறார். மாநாட்டை முன்னிட்டு மாநாட்டு மலர் வெளியீடு, 10 பாசறை நூல்கள் வெளியீடு, கழக முன்னோடிகளுக்கு மரியாதை செய்தல், நீட் விலக்கு நம் இலக்கு அஞ்சல் அட்டை ஒப்படைப்பு, புதுகை பூபாளம் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி மற்றும் பாடகர் தெருக்குரல் அறிவின் இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

* தேர்தல் வெற்றிக்கான தொடக்கமாக திமுக இளைஞரணி மாநாடு அமையும்: அமைச்சர் கே.என்.நேரு
மாநாட்டு பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இது மிகப்பெரிய மாநாடாக அமையும். தலைவர் சொன்னதைப் போல, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கான தொடக்கமாக இந்த மாநாடு அமையும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிப்பதை பொறுத்தவரை, தலைவர் என்ன சொல்கிறாரோ அதன்படி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து தலைவர் முடிவு செய்வார். மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்கு முன் நடந்த மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. கடந்த காலத்தில் 3 நாட்கள் மாநாடு நடைபெறும். ஆனால் தற்போது ஒருநாள் மாநாடாக நடத்தப்படுகிறது. உலக சாதனை மாநாடாக கூட அமையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி இன்று பயணம் சேலத்தில் நாளை திமுக இளைஞர் அணி மாநாடு: பிரமாண்ட டிரோன் ஷோவுக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: