கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி : மலர்தூவி உற்சாக வரவேற்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி – 2024 தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். ஒன்றிய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று முதல் வரும் ஜன. 31 வரை நடைபெற உள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் முதன் முறையாக ‘தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்’ நடைபெற உள்ள நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்கான தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இப்போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

அதன்படி, மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ பெரியசாமி,வேலு ஆகிய அமைச்சர்கள் வரவேற்றனர். சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வரவேற்றார். திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.ஓபிஎஸ் மட்டுமின்றி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பிரதமரை வரவேற்றனர். பின்னர் ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு கடற்படைதளத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கிருந்து கேலோ இந்தியா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு மோடி காரில் பயணம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் இருந்தபடி மக்களுக்கும் தொண்டர்களுக்கும் மோடி கையசைத்து தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.

The post கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி : மலர்தூவி உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: