காணும் பொங்கலையொட்டி மேட்டூர், ஒகேனக்கல், பூலாம்பட்டி ஏற்காட்டில் மக்கள் குவிந்தனர்: காவிரியில் குளித்து உற்சாகம்


மேட்டூர்: மேட்டூர், ஏற்காடு, ஒகேனக்கல் மற்றும் பல்வேறு சுற்றுலா தலங்களில் காணும் பொங்கலையொட்டி ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்கள் காவிரியில் குளித்தும் பூங்காக்களில் விளையாடியும் பொங்கலிட்டும் கொண்டாடினர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று காணும் பொங்கலை மக்கள் உறவினர்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டம் மேட்டூர், ஏற்காடு, பூலாம்பட்டி, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு சுற்றுலா இடங்களில் மக்களின் கூட்டம் அலைமோதியது. இவர்கள் அங்குள்ள பூங்காக்களில் விளையாடியும் காவிரியாற்றில் குளித்தும் பொங்கலிட்டும் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணை பூங்காவில் இன்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கலிட்டனர். பின்னர் மேட்டூர் அணை பூங்காவிற்கு சென்று உணவு உண்டு மகிழ்ந்தனர். அங்குள்ள மீன்காட்சி சாலை, மான் பூங்கா, பாம்பு பண்ணை, முயல் பண்ணை ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். பூங்காவில் சிறுவர்களும் பெரியவர்களும் வயது வித்தியாசமின்றி ஊஞ்சல் ஆடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். பூங்காவிற்கு உள்ளே பல்வேறு போட்டிகளை நடத்தி மகிழ்ந்தனர். காவிரி கிராஸ், நவப்பட்டி, நாட்டான்மங்கலம், பூனாடியூர், கீரைக்காரனூர் ஆகிய பகுதிகளில் கிராம மக்கள் எருதுகளை விரட்டி மகிழ்ந்தனர்.

இதேபோல் ஏற்காட்டில் உள்ள பூங்காக்களிலும் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சுற்றிப்பார்த்து விளையாடி மகிழ்ந்தனர். குடும்பத்துடன் படகு சவாரியும் செய்தனர். இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டிக்கு காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை ஆகிய மாவட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் விசைப்படகில் சென்று காவிரியின் அழகை ரசித்தனர். செல்பி எடுத்து கொண்டனர். மேலும், சினிமா படப்படிப்பு நடந்த பகுதிகளையும், சிறுவர் பூங்கா, காவிரி கரையோரம் உள்ள நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதர் கோயில், நீர்மின் கதவணை நிலையம், பரிசல் துறை ஆகியவற்றை கண்டு ரசித்தனர்.

இதையடுத்து அங்கிருந்தபடி மேட்டூருக்கும் சிலர் சென்றனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் ஏராளமான மக்கள் இன்று திரண்டனர். எண்ணெய் தேய்த்து, காவிரியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்துடன் பரிசல் சவாரி செய்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா தலங்களில் மக்கள் அதிகளவில் குவிந்ததால் மேட்டூர், பூலாம்பட்டி, ஏற்காடு, ஒகேனக்கல் மற்றும் காவிரி கரையோரங்களில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post காணும் பொங்கலையொட்டி மேட்டூர், ஒகேனக்கல், பூலாம்பட்டி ஏற்காட்டில் மக்கள் குவிந்தனர்: காவிரியில் குளித்து உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: