ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் 65 மகளிர் சுயஉதவி குழுவினர் பொங்கல் விழா கொண்டாட்டம்

 

ஜெயங்கொண்டம்,ஜன.14: ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு சார்பில் சமத்துவ பொங்கல் விழா 65க்கும் மேற்பட்ட குழுக்களாக 1300 பேர் பங்கேற்று கொண்டாடினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இலையூர் ஊராட்சியில் உள்ள 65 மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த 1300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

இதில் 65 சுய உதவி குழுவினரும் தனித்தனியாக ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஒரே இடத்தில் தனித்தனி பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பானை பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரம் செய்து கொண்டாடினர். தொடர்ந்து செங்கரும்பு, மாவிலை, தோரணங்களுக்கு இடையில் வாழை இலையில் பொங்கலை வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.

இதனையடுத்து தயாரிக்கப்பட்ட பொங்கலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்கி தங்களது மகிழ்ச்சியை சுய உதவி குழு பெண்கள் பகிர்ந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட 1300 பெண்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன் சார்பில் அனைவருக்கும் புதிதாக புத்தாடைகள் புடவைகள் வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 1300 பெண்கள் ஒரே இடத்தில் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடி ஏராளமானவருக்கு பொங்கல் வழங்கி ஒவ்வொருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் 65 மகளிர் சுயஉதவி குழுவினர் பொங்கல் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: