மினி மாரத்தான், விளம்பர பிரசார வாகன பேரணி

கிருஷ்ணகிரி, ஜன.14: கிருஷ்ணகிரியில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான மினி மாரத்தான், விளம்பர பிரசாரம் மற்றும் இருசக்கர வாகன பேரணியை கலெக்டர், எம்எல்ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருகிற 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிக்கான மினி மாரத்தான், விளம்பர ஊர்தி மற்றும் இருசக்கர வாகன பேரணியை கலெக்டர் சரயு, மதியழகன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தனர். இது குறித்து கலெக்டர் கூறியதாவது: தமிழ்நாட்டில், கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டிகளை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வருகிற 19ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இதில் சென்னையில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாள்வீச்சு, வாலிபால், பளுதூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, ஜூடோ, டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம், மல்யுத்தம், ஹாக்கி, நீச்சல், ஜிம்னாஸ்டிக், டென்னீர், துப்பாக்கி சுடுதல், கபடி மறறும் சிலம்பம் (டெமோ) நடைபெறவுள்ளது. மதுரையில் கோ-கோ, கட்கா விளையாட்டுப் போட்டியும், திருச்சியில் மல்லர்கம்பு, களரிப்பட்டு விளையாட்டு போட்டியும், கோவை மாவட்டத்தில் கூடைப்பந்து போட்டியும் நடைபெறுகிறது. இதில் 18 வயதிற்குட்பட்ட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து நாடு முழுவதும் 5,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திறந்தவெளி மைதானத்திலிருந்து டார்ச் சுற்றுப்பயணம் கிருஷ்ணகிரி நகரை சுற்றி விளம்பரப்படுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், மாவட்ட அளவிலான திருக்குறள், கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் மினி மாரத்தான் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால், தாசில்தார் விஜயகுமார் மற்றும் விளையாட்டு பயிற்றுநர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post மினி மாரத்தான், விளம்பர பிரசார வாகன பேரணி appeared first on Dinakaran.

Related Stories: