பணியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூரில் போராட்டம்

திருச்செந்தூர், ஜன.14: திருச்செந்தூரில் தூய்மைப்பணியாளரை தாக்கியவரை கைது செய்யக்கோரி நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர், பெஞ்சமின் காலனியை சேர்ந்தவர் முத்தையா (58). இவர் திருச்செந்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணியின் போது சன்னதித்தெருவில் குப்பை அள்ளுவதற்கு இடையூறாக இருந்த பைக்கை ஓரமாக விட்டபோது முத்தையாவை மர்ம நபர் ஒருவர் தாக்கி, ஜாதி பெயரை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முத்தையா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தூய்மைப்பணியாளரை தாக்கிய நபரை கைது செய்ய கோரி திருச்செந்தூர் நகராட்சி முன்பு நிரந்தர தூய்மை பணியாளர்கள் 22 பேர் மற்றும் தற்காலிக பணியாளர்கள் 60 பேர் உட்பட 82 பேர் நேற்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் நகர் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி பாதிப்படைந்தது. தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திராவிட தமிழர் கட்சி மாநில நிதிச்செயலாளர் சங்கர், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் காயல் முருகேசன், மாவட்ட தலைவர் சந்தனம், மகளிரணி மாவட்ட செயலாளர் ஹேமா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களிடம் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, கோயில் இன்ஸ்பெக்டர் தர்மர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தூய்மை பணியாளரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினர். இருந்த போதிலும் குற்றவாளியை கைது செய்யும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் போலீசார் சிசிடிவி காமிரா உதவியுடன் தூய்மைப்பணியாளரை தாக்கியதாக திருச்செந்தூர், சபாபதிபுரம் தெருவைச் சேர்ந்த கலைச்செல்வன் (36) என்பவரை கைது செய்தனர்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தூய்மைப்பணியாளர்கள் பணிக்கு சென்றனர். போகி மற்றும் பொங்கல் பண்டிகை நேரத்தில் தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தால் சுகாதார பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதை கருத்தில்கொண்டு துரித நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post பணியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் திருச்செந்தூரில் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: