பாரதிதாசன் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் சிறந்த மாணவர்களுக்கு வீட்டுமனை பட்டா: பாஜ தலைவர் அண்ணாமலை வழங்கினார்

காஞ்சிபுரம், ஜன.14: ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் பாஜ தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறந்த மாணவ, மாணவிகளுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பரிசுகளை வழங்கினார். காஞ்சிபுரம், ஓரிக்கை பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் 37வது ஆண்டு விழா, பள்ளி நிறுவனர் நினைவு தினம் மற்றும் சிறந்த மாணவ – மாணவிகளுக்கு வீட்டுமனை பாட்டாக்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. பள்ளியின் தலைவர் எம்.அருண்குமார் இதில் தலைமை வகித்தார். பள்ளி தலைமை நிர்வாக அலுவலர்கள் இ.விநாயகமூர்த்தி, எம்.வெங்கடேசன், பள்ளி முதல்வர் எஸ்.நிர்மலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பி.ரேமஷ் வரவேற்று பேசினார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, இப்பள்ளியில் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய 300 மாணவ, மாணவிகளுக்கு தலா ₹75 ஆயிரம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்களை இலவசமாக வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “2047ம் ஆண்டு இந்தியா உலகிலேயே முதன்மை நாடாக மாறி இருக்கும். அப்படி மாறுவதற்கு தேவையான சிறந்த கல்வி இன்றைக்கு அவசியமாகி இருக்கிறது. ஒருவர் லஞ்சம் வாங்குகிறார் என்றால், அவர் கற்ற கல்வி சரியில்லை என்றுதான் பொருளாகும். எனவே, இந்தியாவில் இப்போதுள்ள இளைய தலைமுறைக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியமான உடல், வலிமையான மனது, தவறை தட்டிக்கேட்டும் துணிவு இவை அனைத்து தேவைப்படுகிறது. இவை அத்தனையும் இருப்பவர்களே லஞ்சம் வாங்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் படித்து முடித்து, நல்ல ஆசிரியர்களாக வந்து, பள்ளி மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாகும் மாணவர்கள், நேர்மையான அரசியல்வாதிகளாக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஏனென்றால் நம் தேசத்திற்கு மிகவும் நேர்மையான அரசியல்வாதிகள் தேவைப்படுகிறார்கள்” என்றார். இதனையடுத்து, பல்வேறு கலை நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில், வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் டாக்டர் அருண்குமார் நன்றி கூறினார். முன்னதாக, பள்ளி நிர்வாகத்தின் தலைவர் எம்.அருண்குமார், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையிடம் வளர்ச்சி பணிகளுக்காக ₹2 லட்சம் நிதியுதவி வழங்கினார். அதனை பெற்றுகொண்ட அண்ணாமலை, மீண்டும் அத்தொகையினை தலைவர் அருண்குமாரிடம் திருப்பிக்கொடுத்தார். அந்த பணத்தை பள்ளியின் அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி சிறந்த விஞ்ஞானிகளை உருவாக்குங்கள் என்று அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

The post பாரதிதாசன் பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் சிறந்த மாணவர்களுக்கு வீட்டுமனை பட்டா: பாஜ தலைவர் அண்ணாமலை வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: