ஜாதியை சொல்லி திட்டி, பணி செய்ய விடாமல் அதிமுக எம்எல்ஏ, மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி: தென்மண்டல ஐஜி, டிஐஜியிடம் பரபரப்பு புகார்


மதுரை: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜ். இவரது மனைவி வசந்தி மான்ராஜ். இவர் நேற்று தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், மதுரை டிஐஜி ரம்யா பாரதியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுகவை சேர்ந்த திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜின் மனைவியான நான், விருதுநகர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ளேன். கடந்த ஆண்டு சுமார் ரூ2 கோடிக்கு விருதுநகரை சுற்றி உள்ள அரசு பள்ளிகளுக்கு டேபிள், சேர் வாங்க, மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது விருதுநகர் மாவட்ட 4வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு அதிமுக உறுப்பினரான வேல்ராணியின் கணவரும், சிவகாசி மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளருமான வெங்கடேஷ் தலையீடு செய்து அந்த ஒப்பந்ததாரர்களிடம் யாருக்கும் தெரியாமல் 50 சதவீதத்தை லஞ்சமாக பெற்றுவிட்டார். இவர் ஏற்கனவே, விருதுநகர் மாவட்டத்தை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு தரம் இல்லாத பொருட்களை விநியோகம் செய்துள்ளார். தற்போது மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து சுமார் ரூ2 கோடியே 20 லட்சம் மதிப்பில் பள்ளிகளுக்கு டேபிள் மற்றும் சேர்கள் வாங்குவதற்கு கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் அவரே நேரடியாக ஒப்பந்ததாரர்களை நியமனம் செய்துள்ளார்.

மேலும், தரமற்ற பொருட்களை வாங்கி பள்ளிகளுக்கு அனுப்ப முயற்சி செய்து வருகிறார். வெங்கடேஷ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தேன். இதனால் என்னையும், கணவரான திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ மான்ராஜையும், தொடர்ச்சியாக ஜாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வசந்தி மான்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘ வெங்கடேஷ், எங்கள் மாவட்ட ஊராட்சி குழு நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டு எங்களை மிரட்டும் வகையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி அவரது தலையீட்டின் பெயரில் முறைகேடு செய்து வருகிறார்’’ என்றார்.

The post ஜாதியை சொல்லி திட்டி, பணி செய்ய விடாமல் அதிமுக எம்எல்ஏ, மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி: தென்மண்டல ஐஜி, டிஐஜியிடம் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: