டான்ஹோடா விற்பனை மையம் மூலம் விவசாயிகளிடம் நேரிடையாக காய்கறிகள் வாங்கி விற்க திட்டம்: மஞ்சப்பைக்கு 5% சலுகை, தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: ‘நம்ம சென்னை நம்ம சந்தை’ மூலம் விவசாயிகளிடம் வயல்களில் இருந்தே காய்கறிகளை 24 மணி நேரத்தில் வாங்கி செம்மொழி பூங்காவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விற்பனை செய்யப்படும் என்றும், துணிப்பை கொண்டு வந்து வாங்குவோருக்கு 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை மக்களுக்கு ஓர் அறிய வாய்ப்பாக பல்வேறு மாவட்டங்களில் விளையக்கூடிய காய்கறிகளை 24 மணி நேரத்தில் விவசாயிகளின் வயல்களில் இருந்து பெற்று விற்பனை செய்யப்படுகிறது.

வாரந்தோறும் சென்னை, செம்மொழிப் பூங்காவில் 2 நாட்கள் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை காலை வேளைகளில் மட்டும்) பாரம்பரிய காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செம்மொழிப் பூங்காவில் உள்ள டான்ஹோடா விற்பனை மையத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் துணிப்பை (மஞ்சப்பை) கொண்டு வந்து வாங்குவோருக்கு 5 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

அதன்படி கறிவேப்பிலை செங்காம்பு, வெள்ளை பாகல் (கோவை), பழுபாகல், மஞ்சள் பூசணி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சர்க்கரைவள்ளி கிழங்கு (இளஞ்சிவப்பு நிறம்), கொடைக்கானல், மலைப்பூண்டு, கன்னியாகுமரி காந்தாரி மிளகாய், கள்ளக்குறிச்சி, எறையூர் சேப்பக்கிழங்கு, உளுந்தூர்பேட்டை கருணைகிழங்கு, நாமக்கல், கண்ணாடி கத்தரி, சேலம், ஊர்அவரை, தென்காசி, புளியங்குடி எலுமிச்சை, பாவூர்சத்திரம் வெண்டை, வெள்ளைக்கத்தரி, நெல்லை சிறுகிழங்கு, வேலூர், இலவம்பாடி முள்கத்தரி, விழுப்புரம், கோவைக்காய், விருதுநகர் அதலக்காய், சாத்தூர் வெள்ளரி, திருப்பூர் மூக்குத்தி அவரை, சிறகு அவரை, பூனைக்காலி அவரை போன்ற பாரம்பரிய காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வேலூர் மாவட்டத்தில் இருந்து வெந்தயகீரை, சிறுகீரை, அரைகீரை, பாலக்கீரை, மணத்தக்காளி கீரை, கன்னியாகுமரியில் இருந்து கறிபலா, கிருஷ்ணகிரியில் இருந்து கொடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை), பெரம்பலூர் சின்ன வெங்காயம், நீலகிரி, புரோக்கோலி (பச்சை பூக்கோசு), சிவப்பு முட்டைக் கோசு, பேபி உருளைக்கிழங்கு, முள்ளங்கி, ராணிப்பேட்டையில் இருந்து வாழைக்காய், தூத்துக்குடி பனங்கற்கண்டு, ராமநாதபுரம் பனங்கிழங்கு, ஈரோடு மஞ்சள் கொத்துகள், தர்மபுரி தேங்காய் பூ ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

The post டான்ஹோடா விற்பனை மையம் மூலம் விவசாயிகளிடம் நேரிடையாக காய்கறிகள் வாங்கி விற்க திட்டம்: மஞ்சப்பைக்கு 5% சலுகை, தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: