காதுகேளாத இளைஞர் விளையாட்டு போட்டி 5 மாணவர்களின் செலவை அரசே ஏற்கும்: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: செவித்திறன் மாற்றுத்திறனாளிகளான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வர்ஷினி ஆகியோர் தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு தடகள போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.

பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாவுலோவில் வருகிற 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள முதலாவது உலக காதுகேளாத இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி மறுத்து ஜனவரி 5ம் தேதி இந்திய விளையாட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 5 பேரின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கும்படி உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக 5 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் வீதம் தமிழக அரசால் வழங்கப்படும் என்று இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். எனவே 5 பேரும் பிரேசில் சென்று போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

The post காதுகேளாத இளைஞர் விளையாட்டு போட்டி 5 மாணவர்களின் செலவை அரசே ஏற்கும்: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: