ரஞ்சி கோப்பை 2வது சுற்று முதல் வெற்றி கனவில் தமிழ்நாடு

அகர்தலா: நாட்டின் முக்கிய உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி சென்னை, சேலம், மும்பை என நாடு முழுவதும் 46 நகரங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 38 அணிகள் களம் கண்டுள்ள இந்த தொடரில் தமிழ்நாடு அணி சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முதல் ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்கொண்டது. அதில் 111 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தனது 2வது ஆட்டத்தில் இன்று திரிபுரா அணியை எதிர்கொள்கிறது.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இந்தப் போட்டி நடக்கிறது. தோல்வியில் இருந்து மீண்டால்தான் காலிறுதிக்கான வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும். அதனால் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி இன்று தொடங்கும் ஆட்டத்தில் வெற்றிக்கு முனைப்புக் காட்டும். விருத்திமான் சாகா தலைமையிலான திரிபுரா அணி தனது முதல் ஆட்டத்தில் கோவாவை 237ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய பெரும் உற்சாகத்துடன் தமிழ் நாட்டை எதிர்கொள்ள உள்ளது.

திரிபுராவை விட தமிழ்நாட்டில் அனுபவ ஆட்டக்காரர்களும், அதிகளவில் வெளிமாநில வீரர்களும் இருப்பதால் திரிபுராவை சமாளிக்க மட்டுமல்ல வெல்லும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கிறது. அதை தமிழ்நாடு வீரர்கள் உணர்ந்து விளையாடினால், திரிபுரா வீரர்கள் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும். தமிழ்நாடு அணி விவரம்: ரவி சாய் கிஷோர்(கேப்டன்), என்.ஜெகதீசன், சுரேஷ் லோகேஷ்வர், பிரதோஷ் ரஞ்சன் பால்(விக்கெட் கீப்பர்கள்), சாய் சுதர்சன், பாபா இந்தரஜித், பி.சச்சின், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், எஸ்.அஜித்ராம், எம்.முகமது, சந்தீப் வாரியர், டி.நடராஜன், ஆர்.விமல்குமார், திரிலோக் நாக்.

The post ரஞ்சி கோப்பை 2வது சுற்று முதல் வெற்றி கனவில் தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: