காளஹஸ்தி கோயிலில் 28 நாளில் ₹1.55 கோடி உண்டியல் காணிக்கை தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தது

காளஹஸ்தி, ஜன.11: காளஹஸ்தி சிவன் கோயிலில் 28 நாளில் பக்தர்கள் ₹1.55 கோடி மற்றும் தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோயில் உள்ளது. பஞ்சபூதங்களில் வாயுத்தலமாக விளங்கும் இந்த கோயிலில் ராகு- கேது தோஷம் நிவர்த்தி பரிகார பூஜை சிறப்பு வாய்ந்தது. இந்த கோயிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தரகள் உண்டியலில் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த காணிக்கை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை எண்ணப்படுகிறது. அதன்படி நேற்று காணிக்கை எண்ணும் பணியில், கோயில் நிர்வாக அதிகாரி ராமாராவ் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு ஆகியோர் முன்னிலையில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் காளஹஸ்தி சிவன் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை மற்றும் பரிவார தெய்வங்கள் உண்டியல்களில் மொத்தம் ₹1 கோடியே 55 லட்சத்து 21 ஆயிரத்து 259 காணிக்கையாக கிடைத்தது. மேலும் 43 கிராம் தங்கம், 415.400 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகளான அமெரிக்க டாலர் 110, மலேசியா-15, ஜப்பான்-29, மற்றவைகள்-18 என மொத்தம் 172 கிடைத்தது. இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், 28 நாட்களில் பக்தர்கள் ₹1.55 கோடி மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post காளஹஸ்தி கோயிலில் 28 நாளில் ₹1.55 கோடி உண்டியல் காணிக்கை தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தது appeared first on Dinakaran.

Related Stories: