விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்

*பேரணியில் காவல்துறையினர் பங்கேற்பு

ஊட்டி : கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி ஊட்டியில் நடந்தது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடல் தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் – 2023 நடப்பு ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்பார்வையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இப்போட்டிகள் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வரும் 19ம் தேதி துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. இதில் தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, வாலிபால் உள்ளிட்ட 28 வகையான போட்டிகள் நடக்கிறது. இப்போட்டியில் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதனை முன்னிட்டு கடந்த டிசம்பர் 22ல் கேலோ இந்தியா லோகோ, தீம் சாங் மற்றும் கேலோ டார்ச் அறிமுகப்படுத்தப்பட்டது.

இப்போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டார்ச் சுற்று பயணத்தை கடந்த 6ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த டார்ச் தமிழ்நாடு முழுவதும் பயணித்து மீண்டும் சென்னை திரும்புகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊட்டியில் உள்ள எச்ஏடிபி., மைதானத்தில் டார்ச் சுற்று பயண நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட கலெக்டர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம் நகரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தொடர்ந்து காவல்துறையினர் 100 பேர் பங்கேற்ற இரு சக்கர வாகன பேரணியை கலெக்டர் கொடிசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி எச்ஏடிபி மைதானத்தில் துவங்கி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட் வழியாக மத்திய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

முன்னதாக, கேலோ இந்தியா போட்டி குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்ட போட்டி நடந்தது. மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற இப்போட்டியில் 200 பேர் பங்கேற்றனர். எச்ஏடிபி மைதானத்தில் துவங்கி மார்க்கெட் பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்ற 18 பேருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான சின்னத்துடன் மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் மற்றும் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்டிஒ மகராஜ், முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஊட்டி நகராட்சி ஆணையர் ஏகராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா, ஊட்டி நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: