பொங்கல் பரிசு தொகுப்பு கூப்பன்களை சேல்ஸ்மேனிடம் பறித்து சென்ற அதிமுக ஊராட்சி தலைவர் வட்ட வழங்கல் அதிகாரி நேரில் விசாரணை செய்யாறு அருகே கடுகனூரில் பரபரப்பு

செய்யாறு, ஜன. 10: செய்யாறு அருகே கடுகனூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை ரேஷன் கடை சேல்மேனிடம் இருந்து அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறி பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடுகனூர் கிராமத்தில் 1200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 437 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த ரேஷன் கடையில் சேல்ஸ்மேனாக சின்னதுரை பணியாற்றி வருகிறார். தமிழக அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்கள் கடந்த 2 நாட்களாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் கடுகனூர் ஆதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சேல்ஸ்மேன் சின்னதுரை குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் தொகுப்பு பரிசு கூப்பன்களை குடும்ப அட்டைதாரர்களிடம் பட்டியலில் கையெழுத்து வாங்கி விநியோகம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்த அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் திடீரென சேல்ஸ்மேனிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நானே கொடுத்து விடுகிறேன் எனக்கூறி அவரிடமிருந்த பட்டியலையும் 10க்கும் மேற்பட்ட பரிசுத்தொகுப்பு கூப்பன்களையும் பறித்துவிட்டு கூப்பன்களுக்கு பட்டியலில் கையெழுத்திட்டு அங்கிருந்து சென்று விட்டாராம். அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாலையில் ரேஷன் கடையில் சென்று சேல்ஸ்மேனிடம் கூப்பன்களை கேட்டபோது ஊராட்சித் தலைவர் வாங்கிக் கொண்டார் என பதில் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் கூட்டுறவு துறைக்கு தகவல் அளித்தனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கையெழுத்திட்ட கூப்பன்கள் பலர் இறந்த நபர்களுடையது என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சேல்ஸ்மேன் சின்னதுரை, செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா மற்றும் கூட்டுறவுத்துறை தனி அலுவலர் முருகேசனிடம் தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலுவலர் சங்கீதா மற்றும் கூட்டுறவு தனி அலுவலர் முருகேசன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சேல்ஸ்மேனிடம் இருந்து பட்டியலையும் 10 கூப்பனையும் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கூப்பனில் இருந்த 6 நபர்கள் இறந்து விட்டதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி பணம் மற்றும் இலவச பொங்கல் தொகுப்புகள் பெறும் நோக்கில் பறித்து சென்று இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து வட்டவழங்கல் அலுவலர் சங்கீதா ஊராட்சி தலைவரிடமிருந்து 10 கூப்பன்களையும் வாங்கினார். இதில் இறந்தவர்களின் கூப்பன்கள் தவிர மீதியுள்ள 4 பேருக்கும் அட்டைதாரரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கிடையே அத்துமீறி ஊராட்சி மன்ற தலைவர் கூப்பன்களை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து சேல்ஸ்மேன் சின்னதுரை பெரணமல்லூர் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பொங்கல் பரிசு தொகுப்பு கூப்பன்களை சேல்ஸ்மேனிடம் பறித்து சென்ற அதிமுக ஊராட்சி தலைவர் வட்ட வழங்கல் அதிகாரி நேரில் விசாரணை செய்யாறு அருகே கடுகனூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: