புதிய ஜல்லிக்கட்டு மைதான கலையரங்கம் ஜன.23ல் திறப்பு: அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி

மதுரை: ஜல்லிக்கட்டு கலையரங்கை வரும் 23ம் தேதி திறக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான மூகூர்த்தக்கால் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுபோட்டிகள் பாரம்பரிய வழக்கப்படி பல ஆண்டுகளாக அந்தந்த பகுதி மக்களின் விருப்பப்படி நடைபெற்று வருகிறது. எந்த வகையிலும் தற்போது நடைபெற்று வரும் பாரம்பரிய பகுதியில் இருந்து மாற்றம் செய்வதற்கு வாய்ப்பில்லை. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாத்து போற்றிடும் வகையில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான கலையரங்கம் வரும் ஜன.23ல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் தேதி முடிவானதும், கலையரங்கை திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக வருகை தர உள்ளார். இவ்வாறு கூறினார். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் வரும் 10ம் தேதி பகல் 12 மணி முதல் மறுநாள் 11ம் தேதி பகல் 12 மணி வரை madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கலெக்டர் சங்கீதா தெரிவித்து உள்ளார்.

The post புதிய ஜல்லிக்கட்டு மைதான கலையரங்கம் ஜன.23ல் திறப்பு: அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: