1 டிரில்லியன் டாலர் இலக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு; ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு

சென்னை: 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயித்து செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன் என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்காக ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.

விழாவில் அவர் பேசியதாவது:
வரலாறு, கலாசாரம், இயற்கையில் சிறந்த தமிழகத்தில் முதலீடு செய்ய வந்துள்ள அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். காஞ்சி பட்டுப்போல பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. முதலீடு செய்ய வந்துள்ளவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை தமிழகம் எட்ட வாழ்த்துக்கள். ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவரை பாராட்டுவோம். இஸ்ரோ விஞ்ஞானிகளை முன்னின்று நடத்தியவர் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு தனி இடம் உள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் செங்கோல், தமிழகத்தை சேர்ந்தது.

100வது சுதந்திர தின விழாவின் போது, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக இருக்கும். இந்தியா வலிமை அடைய நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தமிழகத்தின் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும். 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்குக்காக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் தமிழகத்துடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சகோதரர் டி.ஆர்.பி.ராஜா இருவரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்நாட்டை மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். இந்தியாவின் பண்பாட்டிற்கு தமிழக கலாசாரம் அளித்து வரும் பங்கு மிகப்பெரியது. இந்தியாவின் கலாசார தொடர்புகளை பிரதிபலிக்கவே காசி சங்கமம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

நாட்டில் உள்ள பணி செய்யும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, நாட்டின் பொருளாதார உயர்வில் பெண்கள் பங்களிப்பு உயர வேண்டும் என விரும்புகிறேன். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 10 ஆண்டுகளாக நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நலிவடைந்த பொருளாதாரத்தில் இருந்தது இந்தியா. தற்போது இந்தியா வளர்ச்சியடைந்த முதல் 5 நாடுகளின் பட்டியலில் உள்ளது. உலகிலேயே மக்கள் தொகையில் இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா.

2047 என்ற இலக்கை நோக்கி நாட்டை வேகமாக முன்னெடுத்து செல்கிறோம். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம். 2047க்குள் ஒவ்வொன்றிலும் காலனி அடிமைத்தனத்தில் இருந்து மீளுவோம். இந்தியாவின் 100வது சுதந்திர தினத்திற்குள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைவோம். 35 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் இந்தியாவை வளர்ந்த நாடாக்குவது ஒவ்வொருடைய கனவாக இருக்க வேண்டும்.

ஊழலில்லாத இந்தியா, பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தும் வகையில் செயல்படுவோம். பெண்களுக்கு பார்லிமென்டில், இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மிக மகிழ்ச்சியான செய்தி. 2047க்குள் 35 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா அடையும். இதனை தமிழகமும் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகிலேயே தொழில் வளர்ச்சிக்கு மிக சிறந்த இடங்களில் ஒன்று தமிழகம். 2014 முதல் பிரதமர் மோடி எடுத்த தொடர் நடவடிக்கையால் தொழில்துறை வலுவாக உள்ளது. மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி. முதலீட்டாளர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தருவோம் என உறுதியளிக்கிறோம்.
இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.

பியூஸ் கோயல் ‘‘வணக்கம்” என தமிழில் தொடங்கி தனது உரையை தொடங்கினார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார்.

The post 1 டிரில்லியன் டாலர் இலக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு; ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: