உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது * திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர் * தொடர்ந்து 10 நாட்கள் சுவாமி வீதியுலா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஜன.7: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், உத்தராயண புண்ணியகால உற்சவம், கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை, இரவு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் உத்தராயண புண்ணிய கால உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. தை மாதத்தை வரவேற்கும் வகையில் இந்த உற்சவ விழா மார்கழி மாத இறுதியில் நடைபெறுகிறது. அதன்படி, உத்தராயண புண்ணியகால பிரமோற்சவ கொடியேற்றம் நேற்று காலை 5.30 மணி முதல் 7 மணியளவில் அண்ணாமலையார் கோயிலில் விமரிசையாக நடைபெற்றது.

அப்போது, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்கக் கொடி மரத்தில் வேதமந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன் ஆகியோர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து, தங்கக் கொடி மரத்தை மூன்று முறை வலம் வந்த சுவாமி, மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உத்தராயண புண்ணியகால பிரமோற்சவத்தை முன்னிட்டு, மார்கழி மாதம் இறுதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் சுவாமி மாட வீதியுலா நடைபெறுவது வழக்கம். அதன்படி, வரும் 15ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் மாடவீதியில் சுவாமி திருவீதியுலா நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்று தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர், வரும் 16ம் தேதி பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழாவும், 17ம் தேதி மறுவூடல் விழாவும் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் உற்சவ விழாக்கள், கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. அதன்படி, ஆண்டுக்கு நான்கு முறை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம், ஆனி பிரமோற்சவம், மார்கழி மாதத்தில் உத்தராயண புண்ணியகாலம் ஆகியவற்றின் தொடக்கமாக, அண்ணாமலையார் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அடிப்பூர பிரமோற்சவத்தின் தொடக்கமாக, அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அண்ணாமலையார் கோயில் நேற்று நடந்த கொடியேற்று விழாவில், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post உத்தராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது * திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர் * தொடர்ந்து 10 நாட்கள் சுவாமி வீதியுலா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: