காஞ்சிபுரத்தில் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு: கொரோனா தொற்றா என பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம், ஜன.6: காஞ்சிபுரம் எண்ணெய்க்கார தெருவை சேர்ந்தவர் குமார் மகள் யுவஸ்ரீ (19). இவர், சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி வேதியியல் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த டிச.25ம் தேதி சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் காஞ்சிபுரம் காரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு யுவஸ்ரீக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் கொரோனாவில் இருந்து மீண்ட யுவ கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பாத்ரூம் சென்றுவிட்டு திரும்பிய யுவஸ்ரீ படுக்கையில் மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல், இருமல் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கல்லூரி மாணவி, பின்னர் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் நிமோனியா தொற்றுக்கு சிகிச்சை பெற்று 2 தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவி நுரையீரல் அழற்சி மற்றும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாரா என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார பணிகள் இணை இயக்குநர் பிரியா ராஜிடம் கேட்டபோது, கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை நடத்தப்படவில்லை. எனவே, கொரோனா தொற்றால் மாணவி உயிரிழக்கவில்லை. அவருக்கு வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் இருந்ததா என்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு: கொரோனா தொற்றா என பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: