சபரிமலையில் 18ம்படி அருகே தமிழக பக்தர்கள் மீது போலீசார் சரமாரி தாக்கு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்களை 18ம் படி அருகே கேரள போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு பக்தர் படுகாயங்களுடன் சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சபரிமலைக்கு கடந்த வருடங்களை போலவே இந்த வருடமும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த முறை போலீசார் தேவையில்லாத கெடுபிடிகளை ஏற்படுத்தி உள்ளதால் தினமும் சராசரியாக பக்தர்கள் 10 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று தஞ்சாவூரை சேர்ந்த தயானந்த் (24) என்ற பக்தர் உள்பட சிலர் 18ம்படி அருகே நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கேரள போலீசின் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை போலீசார் தயானந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. அவருடன் வந்தவர்கள் அதை தட்டிக் கேட்டனர். ஆனால் அவர்களையும் போலீசார் தாக்கினர். போலீஸ் தாக்கியதில் தயானந்தின் கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சன்னிதானத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தயானந்த் சன்னிதானம் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

* ஓட்டல், கடைகளில் கொள்ளை விலை
கடந்த சில தினங்களாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் ஷிபு தலைமையில் அதிகாரிகள் சபரிமலை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் மிக அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. ஒரு ஓட்டலில் சாப்பிட்டு வந்த பக்தர்களிடம் கட்டணம் குறித்து கேட்டபோது 4 மசாலா தோசைக்கு 360 ரூபாய் வாங்கியதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து அந்த ஓட்டல் உரிமையாளரிடம் கலெக்டர் விசாரித்தபோது, மசாலா தோசையுடன் சட்னி கொடுத்ததால் தான் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறினார். 4 மசாலா தோசையின் விலை ரூ.228 ஆகும். அதைவிட கூடுதல் வாங்கியதால் அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தியபோது பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஷிபு உத்தரவிட்டார்.

The post சபரிமலையில் 18ம்படி அருகே தமிழக பக்தர்கள் மீது போலீசார் சரமாரி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: