90 சதவீத விவசாய நிலங்கள் கண்மாய் பாசனத்தை நம்பியே உள்ளன. 80ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் செய்யப்பட்டு வந்த நெல் விவசாயம் என்பது குறைந்து கடந்த ஆண்டு 65ஆயிரம் எக்டேர் நிலத்தில் மட்டுமே செய்யப்பட்டது. காரி, ராபி(கோடை விவசாயம்) பருவம் எனப்படும் இருபோக சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில் ராபி பருவ விவசாயம் என்பது முழுமையாக இல்லாமல் போனது.
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 1லட்சத்து 90ஆயிரம் ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை மிகக்குறைவாக பெய்தது. வடகிழக்கு பருவ மழையை நம்பியே இப்பகுதிகளில் விவசாயம் செய்யப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தொடங்கி முதல் இரண்டு வாரங்கள் ஓரளவு கன மழை பெய்தது. அதன் பிறகு தற்போது வரை கன மழை பெய்யாமல் லேசான மற்றும் சில பகுதிகளில் சாரல் மழையே பெய்தது.
வடகிழக்கு பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விதைப்பு பணி, நாற்றங்கால் அமைக்கும் பணிகளை விவசாயிகள் தீவிரமாக செய்தனர். ஆனால் போதிய மழை பெய்யாததால் காளையார்கோவில், இளையான்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கன மழை பெய்த போதும் சிவகங்கை மாவட்டத்தில் மழை இல்லை.
மேலும் தென் மாவட்டங்களில் மழை பெய்த போது சிவகங்கை அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் பலத்த காற்றால் நெல் பயிர்கள் சாய்ந்தன. இவ்வாறு சாய்ந்த பயிர்களில் இருந்த நெல் மணிகள் முதிர்ச்சியடையாமல் பயிர்கள் அனைத்தும் சாவியாகிப்போனது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இனிமேல் மழை பெய்து பயிர்கள் காப்பாற்றப்பட வாய்பபில்லை. மழை நேரத்தில் நிலத்தில் சாய்ந்த பயிர்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து அவியும் நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் இப்பயிர்களை காப்பாற்ற முடியாது. எனவே பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக கணக்கிட்டு முழுமையான இழப்பீடு மற்றும் வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழையின்றி நெற்பயிர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.