‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தில் பள்ளிகளில் 8ம்தேதி முதல் 3 நாட்கள் தூய்மைப் பணி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தங்களின் சுத்தம், பள்ளி வளாகத்தூய்மை, பள்ளிகளின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல், மறு சுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு ஏற்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்து ஊக்கமூட்டும் நடவடிக்கைகள், பள்ளி காய்கறித் தோட்டம் அமைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ‘ எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் சிறப்பு செயல்பாடாக வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சிறப்பு பள்ளி தூய்மைப் பணி செயல்பாடுகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகளை, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோரும் மேற்கண்ட அறிவிப்பு குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:. பள்ளிகளின் சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க மாணவர்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் , தன்னார்வலர்கள் இடம் பெறச் செய்தல் வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தன் சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் நன்மைகள் சார்ந்தகுழுக்களை ஏற்படுத்தி பட்டிமன்றம், நாடகங்கள், கலந்துரையாடல், நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் தன் சுகாதாரம் மற்றும் உடல் நலத்தை பேணுவதற்காக கழிப்பறை பயன்படுத்துதல், கை கழுவுதல், ஆகியவற்றை ஊக்குவித்தல் வேண்டும்.

மாவட்ட, வட்டார பள்ளி அளவிலான குழுக்கள் கூட்டத்தை நடத்தி உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராக இருக்க வேண்டும். திட்ட அலுவலர், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்), மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், ஊராட்சிகளின் துணை இயக்குநர், பேரூராட்சி துணை இயக்குநர், இணை இயக்குநர் (மேலாண்மை) ஆகியோர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மாவட்ட அளவிலான குழுவில், மாவட்ட கல்வி அலுவலர் தலைவராக இருக்க வேண்டும். வட்டார கல்வி அலுவலர் உறுப்பினர் செயலராக இருக்க வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகள்(5 பேர்), அரசு சாரா தொண்டு நிறுவனபிரதிநிதிகள்(2பேர்), இல்லம் தேடி கல்வி த்திட்ட தன்னார்வலர்கள்(4பேர்) உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மேலும், சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுவதை கண்காணிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தலைவராகவும், சுற்றுச் சூழல் மன்ற பொறுப்பாசிரியர் உறுப்பினர் செயலராகவும், பள்ளி மேலாண்மைக்குழுவில் உள்ளவர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

The post ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தில் பள்ளிகளில் 8ம்தேதி முதல் 3 நாட்கள் தூய்மைப் பணி: பள்ளிக்கல்வி துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: