இந்தாண்டின் முதல் போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு

புதுக்கோட்டை: இந்தாண்டின் முதல் போட்டியாக தச்சன்குறிச்சியில் நாளைமறுநாள் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் 700 காளைகள் பங்கேற்க உள்ளன. பொங்கலையொட்டி தமிழகத்தில் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றாலும் தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. இந்நிலையில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் தச்சன்குறிச்சியில் நாளை மறுநாள்(6ம் தேதி) நடைபெறுகிறது. தச்சன்குறிச்சியில் உள்ள புனித அடைக்கல அன்னை தேவாலய ஆண்டு திருவிழாவையொட்டி இப்போட்டி நடைபெற உள்ளது.

இதை முன்னிட்டு வாடிவாசல், கேலரி, மேடை, இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு இன்று(4ம் தேதி) துவங்கியது. இதில் கலந்து கொள்ள காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர். போட்டிக்கு 700 காளைகள் வரை அழைத்து வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பைக், சைக்கிள், மிக்சி, கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.

அரசின் விதிமுறைப்படி ஏற்பாடுகள் நடந்து வருகிறதா என கலெக்டர் மெர்சி ரம்யா, டிஆர்ஓ செல்வி, ஆர்டிஓ முருகேசன், மாவட்ட கால்நடை இணை இயக்குநர் ரவிசந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் நேற்று மாலை ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு 48 இடங்களில் ஜல்லிக்கட்டும், 7 இடங்களில் மஞ்சுவிரட்டும், 17 இடங்களில் வடமாடு மஞ்சுவிரட்டும் நடந்தது. அதன்படி இந்தாண்டும் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

The post இந்தாண்டின் முதல் போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு: 700 காளைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: